படத்தை முடக்கி விஜய்யை பிளாக்மெயில் பண்ணுறாங்க… பாய்கிறார் தந்தை எஸ்ஏசி

திருவாரூர்: திரைப்படத்தை முடக்கிவைத்து விஜய்யை பிளாக் மெயில் பண்ணுவது நடக்காது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். திருவாரூரில் நேற்று நடந்த திருமண விழாவில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அளித்த பேட்டி: புதியவர்கள் அரசியலுக்கு வரும்போது இடர்கள் ஏற்படுவது வழக்கம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஜனநாயகன் திரைப்படம் ஏன் வெளியாகவில்லை என்று சாலையில் செல்லும் பெண்மணிக்கு கூட தெளிவாக தெரியும். விஜய் அரசியலுக்கு வந்தபிறகு இளைஞர்கள் எல்லாம் அரசியல் பேச ஆரம்பித்து விட்டனர். வயதான பெண்கள் கூட அரசியல் பேசுகின்றனர். விஜய்க்கு பயமில்லை.

விஜய்க்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ‘‘யாருடனும் சேர்ந்து கொள்ளாதே தம்பி, உன்னுடைய சுயம் போய்விடும், நீ தனியா நில்லு ஜெயிக்க வைக்கிறோம்’’ என்று மக்கள் கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு விஜய் பவர் கொடுப்பதாக கூறுகிறார். அவ்வாறு செய்தால் மீண்டும் அந்த வரலாற்றை தக்க வைத்து கொள்ள முடியும். இந்த வாய்ப்பை காங்கிரஸ் தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும். படத்துக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை, சம்பந்தப்படுத்தாதீர்கள். விஜய் இப்போது நடிகர் இல்லை. அரசியலுக்கு வந்து 2 ஆண்டுகளாகிறது. திரைப்படத்தை பற்றி அவர் கவலைப்படவில்லை. திரைப்படத்தை வைத்து பிளாக் மெயில் பண்ணுவது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: