சென்னை: தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் இணைந்து ஏன், எதற்கு, எப்படி? என்ற தலைப்பில் 8 பிரிவுகளில் விழிப்புணர்வுப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 40 இளைஞர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: இன்றைய காலச்சூழ்நிலையில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலிச் செய்தி மற்றும் வெறுப்பு பிரசாரங்கள் சமூகத்தில் பதற்றமான சூழ்நிலையினை உருவாக்குவதோடு, சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைதத்து வருகின்றன. இந்நிலையில் போலிச் செய்திக்கும், வெறுப்புப் பேச்சுக்கும் இரையாகாமல் பொதுமக்கள் பாதுகாக்கப்பட, சிந்தனையளவிலும் செயலளவிலும் பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, சமத்துவம். சமூக நீதி போன்றவை அடித்தளங்களாய் அமைய வேண்டும்.
இதற்கான விதைகளை அவர்களின் தனித்திறமைகளின் வழி விதைத்திட ஏதுவாக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் மற்றும் தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் இணைந்து ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற தலைப்பில் 8 பிரிவுகளின் கீழ் விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்தியது. இந்த போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 40 இளைஞர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், “எல்லோருக்கும் எல்லாம்” என்ற உயர்ந்த நோக்கத்துடன் பொதுமக்கள் தங்களது எண்ணங்கள், கருத்துகள் மற்றும் கனவுகளை தமிழ்நாடு அரசுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற முன்னெடுப்பை கடந்த 9ம் தேதி திருவள்ளுர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இந்த முயற்சியை பொதுமக்கள் மத்தியில் விரிவாக பரவச் செய்வதற்காக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற தலைப்பில் சமூக ஊடக விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது. அந்த போட்டிகளை நேற்று அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
