காஷ்மீரில் 10 ராணுவ வீரர்கள் பலி சட்டப்பேரவையில் இரங்கல்

தமிழக சட்டப்பேரவையின் 4வது நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏ கே.பவானி கருணாகரன் (அரக்கோணம்) மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகி 10 ராணுவ வீரர்கள் இறந்துள்ளது குறித்து இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை வாசித்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் கானி டாப் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகி ராணுவ வீரர்கள் மறைவுற்றது குறித்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.

நம்முடைய நாட்டின் துணிச்சலான ராணுவ வீரர்களை நாம் இழந்துள்ளோம். அவர்கள் ஆற்றிய சேவை என்றென்றும் நினைவுகூர வேண்டியது. இவ்விபத்தில் காயமடைந்துள்ள ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இத்துயர சம்பவத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த வீரத் தியாகிகளின் குடும்பத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இந்நாட்டு மக்களுக்கும் இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது” என்றார். இந்த இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையிலும், மறைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று 2 மணித்துளிகள் அமைதி காத்தனர்.

மின்சார பேருந்துகளால் நல்ல லாபம்; அமைச்சர் தகவல்
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது ஆத்தூர் எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் பேசுகையில்,‘தலைநகர் சென்னையில் தற்போது நூற்றுக்கணக்கான புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளை இயக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், தினசரி வருவாயை காட்டிலும் இரு மடங்கு அவற்றிற்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. அரசுக்கு அதனால் ஏற்படும் கூடுதல் செலவு எவ்வளவு,‘ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பேசுகையில்,‘உறுப்பினர் கேட்டிருக்கின்ற கேள்விக்கு சொல்ல வேண்டிய பதில், மின்சார பேருந்துதான் தனியாருடைய ஒப்பந்த பேருந்தாக இயக்கப்படுகின்றது. அவற்றை அந்த பேருந்துகளை தயாரிக்கின்ற அசோக் லைலன்ட் நிறுவனத்தினுடைய துணை நிறுவனமான ஒஎச்எம் என்கிற நிறுவனம் தான் இயக்குகிறார்கள். எனவே, அவர்கள் தயாரிக்கின்ற வாகனத்தை அவர்களே பராமரித்து, இயக்குகின்ற அடிப்படையில்தான் இயங்குகின்றது. இதில், நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. காரணம் நாம் ஒப்பந்த அடிப்படையில்தான் இயக்குகிறோம். அவர்கள் என்ன டெண்டர் போட்டிருக்கிறார்களோ அந்த டெண்டர் அடிப்படையில்தான் இயக்குகிறார்கள். அதனால், மின்சார பேருந்துகளை பொறுத்தவரையில் நல்ல லாபகரமான முறையில் இயங்கி வருவதால் எந்த நஷ்டமும் இல்லை,’என்றார்.

மாணவர்களின் தேவை அறிந்து திமுக அரசு செயல்படுகிறது: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஸ்ரீரங்கம் எம்எல்ஏ மொ.பழனியாண்டி பேசுகையில்,‘ஸ்ரீரங்கம் நாவலூர் கோட்டபட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாணவர்கள் சேர்க்கை அதிகமாக உள்ளன. திராவிட மாடல் ஆட்சியில், புதுமைப்பெண் திட்டத்தில், ரூ.1,000, தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் ரூ.1,000 வழங்கப்படுவதால், அரசுக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக உள்ள காரணத்தினால், கூடுதலாக வருப்பறைகளும், கலையரங்கமும் அமைக்க வேண்டும்,’என்றார்.

இதற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பேசுகையில்,‘ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் தற்போது, 8 இளநிலை பட்டப் படிப்பு, 4 முதுநிலை பட்டப் படிப்புகளில் சுமார் 1,400 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மாணாக்கர்களுடைய தேவையறிந்து இவ்வரசு பொறுப்பேற்றவுடன் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 10 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு சுமார் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வகுப்பறை கட்டி முடிக்கப்பட்டு, தற்போது திறக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் கருத்தரங்கு கூடம் செயல்பட்டு வருகிறது. இதனால், உள் கலையரங்கம் தேவையில்லை, தேவை ஏற்படின், நிதிநிலைமைக்கேற்ப வரும் கல்வியாண்டில் முதல்வரின் கருத்துருவைப் பெற்று செய்து தரப்படும்.

மாமல்லபுரம், கன்னியாகுமரிக்கு சிறப்பு மேம்பாட்டு ஆணையம்
தமிழக சட்டப்பேரவையில் நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சட்டமசோதா ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது: மாமல்லபுரம், கன்னியாகுமரி போன்ற முக்கியமான சுற்றுலா மையங்களில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.300 கோடி முதலீடு செய்யப்படும் என்று பட்ஜெட் அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுவசதிகள் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் சீர்கேடு, சூழலியல் சமநிலையின் பாதிப்பு ஆகியவை தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறைகளிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதால், அத்தகைய சவால்களை திறம்பட கையாள தனித்துவமான மேம்பாட்டு ஆணையங்களை நிறுவ வேண்டிய அவசியம் இருக்கிறது.

அதன்படி உள்ளாட்சி அதிகார அமைப்புகள் அல்லது பாரம்பரிய ஆணையத்தின் அதிகாரங்களை மீறாமல், திட்டமிட்ட கட்டமைப்பை உருவாக்க ஒரு சிறப்பு சட்டத்தை இயற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்றவாறு எந்தவொரு பகுதியையும் சிறப்பு மேம்பாட்டு பகுதியாக அறிவிக்கவும், அந்த பகுதிக்கு ஒரு சிறப்பு மேம்பாட்டு ஆணையத்தை அமைக்கவும் அரசுக்கு முழு அதிகாரம் வழங்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாமல்லபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை மேம்படுத்த அமைக்கப்படும் சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம், சிறப்பு முதன்மை திட்டத்தை தயாரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: