தை முடிவதற்குள் முடிவை அறிவிப்பேன்: ரிப்பீட் மோடில் ஓபிஎஸ்

தேனி: கூட்டணி குறித்து தை முடிவதற்குள் பதிலளிக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று சென்னை புறப்பட்டார்.

அப்போது அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம், ‘‘இரண்டு நாட்களில் சென்னையில் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடக்கும். அதற்குப்பின் அடுத்தகட்ட நகர்வு குறித்து உங்களுக்கு உரிய பதில் கிடைக்கும்’’ என்றார். அப்போது, ‘‘மதுராந்தகத்தில் பிரதமர் தலைமையில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு வந்ததா’’ என்ற கேள்விக்கு, ‘‘எல்லாமே தெரிந்து கொண்டு கேள்வி கேட்கிறீர்களே’’ என்றார்.

தொடர்ந்து, ‘‘தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து யாராவது உங்களிடம் பேசியிருக்கிறார்களா’’ என்ற கேள்விக்கு, ‘‘இரண்டு நாட்கள் பொறுங்கள்’’ என்றார். ‘‘தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறினீர்களே’’ என கேட்டதற்கு, ‘‘தை முடிவதற்குள் உரிய பதிலளிக்கப்படும்’’ என தெரிவித்து விட்டு கிளம்பிச் சென்றார்.

Related Stories: