2027 மார்ச் 1ம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பு: அமைச்சர் மெய்யநாதன் பதில்

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடந்தது. பாமக சார்பில் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி பேசியதாவது: நமது நாடு சுதந்திரம் பெற்றுவிட்டால் மட்டும் போதாது, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் முழுமையாக அமலாக்கப்படுகிறதோ அந்த நாள்தான் சுதந்திரம் பெற்ற நாள் என்று பெரியார் சொன்னார். அதற்கு வகுப்பு என்பது சாதிவாரி கணக்கெடுப்பு தான். அதைத்தான் வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், 1931ம் ஆண்டு இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு பிறகு சாதி வாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் அடிப்படையில் 22.2.2023ம் அன்று பிரதமருக்கு, இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து 2024ல் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் வலியுறுத்தி தீர்மான அனுப்பி வைக்கப்பட்டது. 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* தொழிலாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு வரைவு விதிகளை தயாரிக்கிறது: கம்யூ. எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதில்
தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தளி தொகுதி உறுப்பினர் தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) பேசியதாவது: ஒன்றிய அரசு, நாட்டில் தொழிலாளிகள் வர்க்கம் நூறாண்டுகாலமாக போராடி வென்ற 44 தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக 4 சட்டத் தொகுப்புகளை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறது. அந்த 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டுமென்று தற்போது நாடு முழுவதும் தொழிலாளி வர்க்கமும், தொழிற்சங்க அமைப்புகளும் போராடிக்கொண்டிருக்கின்றன. எனவே, தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற 4 சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகவும் இந்த அவையில் தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்ற தொழிலாளிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர் சி.வி.கணேசன்: கடந்த நவம்பர் 21ம்தேதி முதல் நான்கு சட்டத் தொகுப்புகளும் அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவிக்கை செய்துள்ளது. கடந்த மாதம் 30ம்தேதி நான்கு சட்டத் தொகுப்புகளுக்கான வரைவு விதிகளை மீண்டும் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படாமலும் தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் நலத் துறை மற்றும் ஏனைய துறையின் கீழும் செயல்பட்டுவரும் அனைத்துத் தொழிலாளர் நல வாரியங்களையும் மற்றும் அனைத்து தொழிலாளர் நலத் திட்டங்களையும் பாதுகாக்கும் வகையில் மாநில அரசால் வரைவு விதிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

* கறிக்கோழி வளர்ப்போர் போராட்டம் விரைவில் நல்ல தீர்வு காணப்படும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி
சட்டப்பேரவையில் கறிக்கோழி வளர்ப்போர் நடத்தி வரும் போராட்டம் குறித்து சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஏ.கே.செல்வராஜ் (அதிமுக), ராஜேஷ்குமார் (காங்கிரஸ்), அருள் (பாமக), நாகைமாலி (மார்க்சிய கம்யூ.), ராம்சந்திரன் (இந்திய கம்யூ.) பேசினர். அப்போது அவர்கள் ேபசும்போது,‘பெரிய நிறுவனங்கள் கோழிக்குஞ்சுகளை விவசாயிகளிடம் கொடுத்து வளர்த்து 45 நாட்களுக்குப் பின் திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள். இதற்காக ஒரு கிலோ கோழிக்கு ரூ. 6.50 கூலியாக கொடுக்கிறார்கள். இந்த கூலியை ரூபாய் 20 ஆக உயர்த்தி தரும்படி பல்வேறு மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த பிரச்னைக்கு முடிவு காண வேண்டும்” என்றனர்.
இதற்கு பதில் அளித்து, கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, “இந்த பிரச்னை கறிக்கோழி வளர்ப்பவர்களுக்கும் பெரு நிறுவனத்திற்கும் இடையே உள்ள பிரச்னை. இதற்கும் அரசுக்கும் நேரடியாக எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் இந்த பிரச்னை விரைவில் பேசி நல்லமுறையில் தீர்க்கப்படும்” என்றார்.

* திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட் கேட்ட துணை சபாநாயகர்: சபாநாயகர் பதிலால் அவையில் சிரிப்பலை
கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசுகையில்,‘திருவண்ணாமலைக்கு இன்றைக்கு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்திற்காக வருகிறார்கள். ஆகவே, திருவண்ணாமலையில் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும். தற்போது ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, உதான் திட்டத்தில் புதிய விமான நிலையங்களைத் தரவிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். அதில், திருவண்ணாமலையையும் சேர்த்து, உதான் திட்டத்தில் அங்கு ஒரு விமான நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா” என்றார்.
சபாநாயகர் அப்பாவு: அமைச்சர், எப்போது விமானத் துறை அமைச்சரானீர்கள்? இதற்கு பதில் சொல்லுங்கள். (இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது).
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: விமான நிலையத்தைப் பொறுத்தவரை, எனக்கே புரியாத ஒரு புதிராகக் கேட்டிருக்கிறார். அதுகுறித்து அவரிடத்தில் நேரடியாகப் பேசி முடிவு செய்யலாம்.

Related Stories: