சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கிருஷ்ணகிரி எம்எல்ஏ கி.அசோக்குமார் (அதிமுக) பேசுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டம், கம்மம்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு பிரிவுகளில் 459 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. அப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியை சேர்த்து 14 வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை ஒன்று மற்றும் ஆசிரியர் அறை ஒன்று என 16 வகுப்பறைகள் தேவைப்படுகிறது. தற்சமயம் பள்ளியில் 9 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. எனவே, மாணவர்களின் கல்வி நலனைக் காக்கும்பொருட்டு கூடுதலாக ஆறு வகுப்பறை கட்ட வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினருக்கு என்னுடைய நன்றிகள். அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது என்று பல விமர்சனங்களை வைத்தார்கள். ஆனால் தற்போது உறுப்பினரே சொல்லிவிட்டார். அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அதுசார்ந்து கட்டமைப்பை தர வேண்டியது நம்முடைய கடமை. அதிகப்படியாக மாணவச் செல்வங்கள் அந்தப் பள்ளியில் வரும்போது, அது சார்ந்து கட்டிடங்களும், அதுசார்ந்து ஆசிரியர்களும் தேவைப்படுமெனில் கண்டிப்பாக அதையும் செய்து தருவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது.
அதேநேரத்தில் இதுவரையிலும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக முதல்வர், ஆரம்பத்தில் நாம் அனுமதித்த வேலை மட்டும் 477 பள்ளிகளில், 3,878 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்கட்டைமைப்பு செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். 17,314 வகுப்பறைகள் கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, அதில், 9,416 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது வகுப்பறைகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது 7,898 வகுப்பறைகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன” என்றார்.
ராமதாஸின் பெயரை குறிப்பிடாததால் ஜி.கே.மணி ஆவேசம்
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் (பாமக), அன்புமணியை புகழ்ந்து தனது பேச்சை ஆரம்பித்தார். ராமதாஸ் பெயரை குறிப்பிடாததை கண்டிக்கும் விதமாக குறுக்கிட்டு ஜி.கே.மணி மற்றும் அருள் எம்எல்ஏ பேச முற்பட்டனர். அப்போது சபாநாயகர் அப்பாவு,‘ அவரவர் விருப்பப்பட்ட பெயரைத்தான் கூறுவார்கள். நீங்கள் இருக்கையில் அமர்ந்து பேசாதீர்,’என்று கூறி ஜி.கே.மணியை அமைதிப்படுத்தினார்.
தமிழ்வழி கல்வியில் முன்னுரிமை புதிதாக பணிக்கு வருவோருக்கு மட்டும்: சட்டமசோதா தாக்கல்
பேரவையில் நேற்று மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்தார். அதில், அரசு பணிகளில் நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய அனைத்து காலிப்பணியிடங்களிலும் 20 சதவிகிதம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த 2010ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே அரசு பணியில் இருப்பவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் முன்னுரிமை நியமனத்திற்கு தகுதியற்றவர்கள் என்ற தீர்ப்பை வழங்கியது. இதனை தெளிவுபடுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் 2010ம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான முன்னுரிமையின் அடிப்படையில் நடைபெற்ற பணி நியமனங்களை செல்லுபடியாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் புதியதாக பணிக்கு சேருவோருக்கு மட்டுமே தமிழ்வழியில் கல்வி பயில்வதற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதோடு, ஏற்கனவே அரசு பணியில் நியமிக்கப்பட்ட நபர்கள், மிகை ஊதியத்தை கொண்ட பதவிகளில் குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கோரிக்கை வைத்தால் வண்டல் மண் எடுக்க அனுமதி: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
பேரவையில் கேள்வி நேரத்தில் நன்னிலம் எம்எல்ஏ காமராஜ் (அதிமுக) பேசுகையில்,‘மண்பாண்ட தொழிலாளர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். வருடம் முழுவதும் வண்டல் எண் அனுமதி அளிக்க வேண்டும்,’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் ராஜகண்ணப்பன்,‘மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தால் பரிசீலனை செய்து மண் எடுக்க அனுமதி அளிக்கப்படும். மழைக்கால நிவாரணம் தொடர்பாக தொழிலாளர்களின் பட்டியல் அவர்கள் அடையாள அட்டை வைத்து இருந்தால் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’என்றார்.
