வாக்காளர்களை கவர புது புது வாக்குறுதிகள் தேர்தல் ‘இலவசங்கள்’ லஞ்சமாக கருதப்படுமா? தீவிரமாக ஆய்வு செய்வதாக சுப்ரீம் கோர்ட் கருத்து

 

புதுடெல்லி: தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாரி வழங்கும் இலவச அறிவிப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவருவதற்காக பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும், கடன் சுமை அதிகரிப்பதாகவும் நீண்ட காலமாகவே புகார்கள் எழுந்து வருகின்றன. தற்போது இந்தியாவின் கடன் சுமை 200 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில், தங்கம், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாகக் கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. இதை எதிர்த்து வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர், ‘இலவச அறிவிப்புகளை ஊழல் நடவடிக்கையாக அறிவிக்க வேண்டும்’ என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, இலவச கலாசாரம் குறித்துத் தங்களது கவலையைத் தெரிவித்தது. மேலும், ‘கல்வி மற்றும் மருத்துவம் போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கும், ஓட்டுக்காக வழங்கப்படும் இலவசங்களுக்கும் வித்தியாசம் உள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் மக்கள் பணத்தை வீணடிப்பது சரியல்ல. மாநில அரசுகளிடம் உபரி நிதி இருந்தால், அதைச் சாலை வசதி மற்றும் மருத்துவமனைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகளுக்குப் பயன்படுத்தலாம். ‘இலவசங்கள்’ லஞ்சமாகக் கருதப்படுமா என்பது குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்யப்போகிறோம்’ என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

Related Stories: