நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘ஐஐடி’ மாணவர்கள் 65 பேர் தற்கொலை: மாதத்திற்கு ஒருவர் சாவு என அதிர்ச்சி தகவல்

 

புதுடெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் 65 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி-யில் படிக்கும் மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. உச்ச நீதிமன்றம் அமைத்த தேசிய பணிக்குழுவின் ஆய்வில் 65 சதவீத உயர்கல்வி நிறுவனங்களில் மனநல நிபுணர்கள் இல்லை என்ற குறைபாடு ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் குறைந்தது 65 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது சராசரியாக மாதத்திற்கு ஒரு மாணவர் உயிரிழக்கும் அபாயகரமான நிலையை காட்டுகிறது. படிப்பு ரீதியான அழுத்தம், தனிமை மற்றும் வேறுபாடுகள் போன்ற காரணங்களே இத்தகைய முடிவுகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன.

இந்நிலையில் குளோபல் ஐஐடி முன்னாள் மாணவர்கள் ஆதரவு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024ம் மற்றும் 2025ம் ஆண்டுகளில் மட்டும் 30 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஐஐடி கான்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 9 இறப்புகளும், கரக்பூர் ஐஐடியில் ஐந்து ஆண்டுகளில் 11ம் தற்கொலைகளும் பதிவாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் 54 பேர் ஆண்கள் மற்றும் 11 பேர் பெண்கள் ஆவர். இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் தீரஜ் சிங் கூறுகையில், ‘கல்வி நிலையங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமையாகும். மேலும் மாணவர்களின் மனநலம் காக்கத் தவறிய இயக்குனர்கள் மீது ஒன்றிய கல்வி அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

Related Stories: