பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் உரையை, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் முழுமையாக வாசிக்காமல் வெளியேறியதால் அமளி ஏற்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இன்று உரை நிகழ்த்துவதாக இருந்தது. சட்டப்பேரவை கூட்டுக்கூட்டம் கூடியதும், ஆளுநர் உரையின் முதல் மற்றும் இறுதி வரிகளை மட்டுமே வாசித்துவிட்டு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.அப்போது, ஆளுநரை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரசாத், உரையை முழுமையாக வாசிக்குமாறு கேட்டுக்கொண்டார். எனினும், அந்த கோரிக்கையை ஏற்க ஆளுநர் மறுத்துவிட்டார்.இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களும் எம்எல்சிக்களும் ஆளுநரின் செயலைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்த சம்பவம் குறித்துப் பேசிய முதல்வர் சித்தராமையா, ‘‘ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட உரையை சட்டமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் வாசிக்க வேண்டும். இது ஒரு அரசியலமைப்புத் தேவை. அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிப்பதற்குப் பதிலாக ஆளுநர் தானே தயாரித்த உரையைப் படித்தார். இது இந்திய அரசியலமைப்பை மீறுவதாகும். இது இந்திய அரசியலமைப்பின் 176 மற்றும் 163 ஆகிய சரத்துக்களை மீறுவதாகும். அவர் தனது அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்றவில்லை.எனவே, ஆளுநருக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தப் போகிறோம். மேலும், உச்ச நீதிமன்றத்தை அணுகுவதா வேண்டாமா என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்’’ என தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவையிலும் ஆளுநர் தனது உரையை வாசிக்க மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
