வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருளை ஒன்றிய அரசு எப்படி அனுமதிக்கிறது? : அமைச்சர் ரகுபதி காட்டம்

சென்னை : ஆளுநர் மாளிகையின் அறிக்கை, முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சர் ரகுபதி காட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது குறித்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், “சட்டப்பேரவை நிகழ்ச்சியின் இறுதியிலே தேசிய கீதம் இசைப்பதே தமிழ்நாட்டின் மரபு. தமிழ்நாட்டின் மரபு பற்றி ஆளுநருக்கு பல முறை எடுத்துக் கூறிவிட்டோம். சட்டப்பேரவைத் தலைவர் கேட்டுக் கொண்டும் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறி விட்டார். ஆளுநரின் செயல் அரசியலமைப்புக்கு விரோதமானது. அமைச்சரவை உறுதிப்படுத்தி அனுப்பிய உரையை மட்டுமே ஆளுநர் வாசிக்க முடியும். ஆளுநர் தனது சொந்தக் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு இடமில்லை. மாநில அரசால் வழங்கப்பட்ட உரையில் நீக்கம் செய்வதற்கு அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை.

ஆளுநரின் மைக்கை அணைத்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. எதிர்கட்சிகள் கூட முன்வைக்காத குற்றச்சாட்டுகளை ஆளுநர் முன்வைக்கிறார். பாஜகவின் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்கு ஆளுநர் ரவி வந்து சென்றுள்ளார். தேர்தல் ஆண்டில் ஆட்சியின் மீது குறை சொல்ல வேண்டும் என்று ஆளுநர் கனவு காண்கிறார். தொழில் வளர்ச்சி தொடர்பாக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை. தமிழ்நாடு 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில் வளர்ச்சி இல்லை என்று ஆளுநர் சொல்வது உண்மையென்றால் தமிழ்நாடு எப்படி பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கும்?.

11.19 % பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எப்படி எட்டும் என்று ஆளுநரிடம் கேட்க வேண்டும். ஆளுநர் சொல்வது போல தமிழ்நாட்டில் கல்வித் தரம் குறையவில்லை. போதைப்பொருள் எப்படி வருகிறது? எங்கிருந்து வருகிறது? அதனால் பலர் எவ்வளவு கோடி சம்பாதிக்கின்றனர் என்பது தெரியும். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருளை ஒன்றிய அரசு எப்படி அனுமதிக்கிறது?. ஆளுநர் மாளிகையின் அறிக்கை, முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: