தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற 2-ம் கட்ட சிபிஐ விசாரணை நிறைவு

டெல்லி: தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற 2-ம் கட்ட சிபிஐ விசாரணை நிறைவு பெற்றது. கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக 2வது முறையாக சிபிஐ விசாரணைக்கு இன்று விஜய் ஆஜரானார். விசாரணையின் போது விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்

தமிழ்நாடு காவல்துறை வழங்கியுள்ள சிசிடிவி காட்சிகளில் தண்ணீர் பாட்டில்கள் வீசுவது தெரிகிறது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட அதே சமயத்தில்தான் வீசியுள்ளீர்கள்; அப்போது கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா? வாகனத்தின் மேல் இருந்த உங்களுக்கு கீழே நிலைமை மோசமாகி இருந்ததை அறியவில்லையா என விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் சரமாரியாக கேள்வியெழுப்பினர். கூட்ட நெரிசலைத் தடுக்க, வாகனத்தை நிறுத்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்துள்ளீர்கள் என அதிகாரிகள் கூறினர்.

ஏழு மணி நேரம் தாமதம் ஏன் என்ற கேள்விக்கு சாலைகளில் பல்வேறு வளைவுகள் இருந்துள்ளது என விஜய் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. தாமதம் சாலை வளைவுகளால் மட்டும்தான் ஏற்பட்டது என்றால் அதற்கான ஆதாரம் என்ன என்பதை இன்று சமர்ப்பிக்க வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

கூட்ட நெரிசல் தொடர்பாக காவல்துறை பொது அறிவிப்பை தொடர்ந்து செய்து வந்துள்ள வீடியோக்களை சமர்ப்பித்துள்ளனர். 41 பேர் பலியான வழக்கில் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரை சேர்க்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும், பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் கரூர் விவகாரத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: