பெங்களூரு: கர்நாடக காவல்துறையில் டிஜிபியாக (சிவில் உரிமைகள் அமலாக்கம்) இருப்பவர் கே. ராமச்சந்திர ராவ். இவர் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் காபிபோசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கும் நடிகை ரன்யாராவின் தந்தையாவார். நேற்று சமூக வலைதளங்களில் சில பெண்களுடன் ராமசந்திரராவ் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அச்சமடைந்த ராமசந்திரராவ், பெங்களூருவில் உள்ள மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் பரமேஸ்வரை சந்தித்து விளக்கம் கொடுக்க சென்றார். ஆனால் அவரை சந்திக்க அனுமதி வழங்கவில்லை.
அப்போது செய்தியாளர்களிடம் ராமசந்திராவ் கூறும்போது, ‘இது எப்படி, எப்போது நடந்தது, யார் இதைச் செய்தார்கள் என்பதையும் நான் யோசித்து வருகிறேன். இந்தக் காலத்தில் எதுவும் நடக்கலாம். எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. இதை கேள்விபட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். இது எல்லாம் ஜோடிக்கப்பட்டவை. எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. எனக்கு எதிராக தவறான தகவல் பரவி வருவது குறித்து உள்துறை அமைச்சரை சந்தித்து விளக்குவேன். மேலும் எனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட பொய் தகவலை சட்டப்படி சந்திப்பேன்.
இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்வேன்’ என்றார். இது குறித்து முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டபோது, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம். காவல்துறை அதிகாரி எவ்வளவு மூத்தவராக இருந்தாலும் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அரசு இது குறித்து விசாரிக்க ஏற்பாடு செய்வோம். மூத்த அதிகாரி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்கும்படி மாநில காவல் துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளேன். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
