பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் பலுசிஸ்தானில் 40 மசூதிகள் தரைமட்டம்: மதகுருமார்கள் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு

 

பலுசிஸ்தான்: பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக ராணுவத்திற்கும் உள்ளூர் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த 12ம் தேதி கலாட் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இதற்கு பதிலடியாக 13ம் தேதி தாதர் பகுதியில் தகவல் தொடர்பு கோபுரம் மற்றும் டேரா புக்டி பகுதியில் எரிவாயு குழாய்களை பலுசிஸ்தான் குடியரசு படையினர் தகர்த்தனர். மேலும் 14ம் தேதி நடந்த தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று பலுசிஸ்தான் தேசியவாத தலைவர் மிர் யார் பலூச் வெளியிட்ட அறிக்கையில், ‘பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தி பலுசிஸ்தானில் உள்ள சுமார் 40 மசூதிகளை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.

கலாட் பகுதியின் கான் மசூதி மோட்டார் குண்டுகளால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. ராணுவத்தினர் புனித நூலான குர்ஆனை எரித்ததோடு, மசூதி இமாம்கள் மற்றும் நிர்வாகிகளை கடத்திச் சென்றுள்ளனர். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை குறை கூறும் பாகிஸ்தான் அரசுக்கு, சிறுபான்மையினர் உரிமைகள் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. சொந்த நாட்டு மக்களையே ஒடுக்கும் பாகிஸ்தான் மற்றவர்களுக்கு பாடம் எடுக்க முடியாது’ என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே கடந்த மே மாதம் தங்களை தனி நாடாக அறிவித்துக்கொண்ட பலுசிஸ்தான் அமைப்பானது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு முழு ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: