பொன்னேரி: பொன்னேரி அருகே, பழவேற்காட்டில் இன்று பொங்கல் பண்டிகை முடிந்ததும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பழவேற்காடு கடற்கரைக்கு படையெடுத்து வருவர். அங்கு அவர்கள் கடலில் அல்லது ஏரியில் குளிக்க சென்றால், ஒரு உயிரிழப்புகூட ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, திருப்பாலைவனம் காவல்துறை சார்பில், நேற்று முன்தினம் மாலை பழவேற்காட்டில் பொன்னேரி காவல் உதவி ஆணையர் சங்கர் தலைமையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆய்வாளர் காளிராஜ் வரவேற்றார். இதில் மீன்வளம், வருவாய், வனத்துறை, தமிழ்நாடு கடலோர காவல் படை, பழவேற்காடு சுற்றுவட்டார மீனவ கிராமங்களின் நிர்வாகிகள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பின்னர், ஆவடி காவல் இணை ஆணையர் சிவகுமார் பழவேற்காடு பகுதிக்கு வந்து, அங்கு மீனவர் கிராம நிர்வாகிகளுடன் கலந்துரையாடி, அதிகளவில் சுற்றுலா பயணிகள் கூடும் கடற்கரை பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, அங்குள்ள தமிழகத்தின் 2வது மிக உயரமான லைட்ஹவுசை இன்று முதல் பார்வையாளர்கள் சென்று பார்ப்பதற்கு அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து, லைட்ஹவுசின் உச்சிவரை பார்வையாளர்கள் சென்று பார்ப்பதற்கு புதிய லிப்ட் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த லிப்ட் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிவகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
