திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் அதியமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் ஆதித்தமிழர் பேரவை போட்டியிடுகிறது. அரசியலில் எல்கேஜி பயிலும் விஜய், ஏபிசிடி கற்க பனையூரில் இருந்து வெளியே வரவேண்டும். அரசியல் என்பது வெறும் மேடைப்பேச்சுக்கான களம் மட்டுமல்ல. பொது விஷயங்கள் குறித்தும் பேச வேண்டும் திருப்பரங்குன்றம் விஷயத்தில் இதுவரை எந்த கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை.
ஒன்றிய அரசு தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ.3,000 கோடியை, ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது குறித்தும் பேசவில்லை. அவருடைய படம் ஜனநாயகன், சென்சார் போர்டில் சிக்கியுள்ளது. இதற்கே இதுவரை குரல் கொடுக்காத அவர், எப்படி மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பார்? பராசக்தி படத்தில் அறிஞர் அண்ணா கூறிய வார்த்தைகளை, சென்சார் போர்டு நீக்கியுள்ளது. இதனை தமிழக முதல்வர் கண்டித்துள்ளார். ஆனால் சென்சார் போர்டை கண்டிக்கும் தைரியம் கூட விஜய்க்கு இல்லை. முழுமையான ஒரு அரசியல்வாதியாக இல்லாத அவர், தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கலாம்.இவ்வாறு கூறினார்.
