விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில் அரிவாளால் வெட்டிய கொலைக்குற்றவாளி சுட்டுப்பிடிப்பு: திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (31). இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. விக்னேஸ்வரன், மேலும் ஒரு கொலை சம்பவத்தில் ஈடுபட போவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து நேற்று மாலை, திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீசார், சவேரியார்பாளையம் அருகே உள்ள சிகேசிஎம் காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு விசாரணைக்காகச் சென்றனர்.

அப்போது போலீசாருடன் வர மறுத்து விக்னேஸ்வரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்ஐ ஜான்சனின் கையை வெட்டியுள்ளார், இதையடுத்து, டிஎஸ்பி கார்த்திக் தற்காப்புக்காக துப்பாக்கியால் விக்னேஸ்வரனின் வலது காலில் சுட்டதில் அவர் மயங்கி விழுந்தார். படுகாயமடைந்த எஸ்ஐ ஜான்சன் மற்றும் குண்டு காயம் அடைந்த விக்னேஸ்வரன் ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: