திருவண்ணாமலை, ஜன.8: திருவண்ணாமலை மாவட்டத்தில், 7.89 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.3 ஆயிரத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ெதாடங்கி வைக்கிறார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாட, அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் ரூ.3 ஆயிரம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில், அரிசி அட்டை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்கள் உள்பட மொத்தம் 7 லட்சத்து 89 ஆயிரத்து 267 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க, நாளொன்றுக்கு தலா 200 குடும்பங்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டு, அதற்கான டோக்கன்கள் ஏற்கனவே, வீடு வீடாக வழங்கப்பட்டுள்ளது.
அதோடு, மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தவறுகள் நடைபெறாமல் கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவுக்கும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் 1750 ரேஷன் கடைகளுக்கும், சர்க்கரை, பச்சரிசி, கரும்பு அனுப்பும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து முடிந்தது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். அதில், கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி சி.என்.அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். மேலும், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, செங்கம் தொகுதியில் எம்எல்ஏ மு.பெ.கிரி, வந்தவாசி தொகுதியில் எம்எல்ஏ அம்பேத்குமார், கலசபாக்கம் தொகுதியில் எம்எல்ஏ சரவணன், செய்யாறு தொகுதியில் எம்எல்ஏ ேஜாதி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
