மாநில வளர்ச்சி, மக்களின் வளர்ச்சியை இரு கண்களாக கருதி முதல்வர் உழைக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு 7.89 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

திருவண்ணாமலை, ஜன. 9: திருவண்ணாமலை மாவட்டத்தில், 7.89 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.3 ஆயிரத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ெதாடங்கி வைத்தார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்தில், அரிசி அட்டை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்கள் உள்பட மொத்தம் 7 லட்சத்து 89 ஆயிரத்து 267 குடும்பங்களுக்கு நேற்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். எம்எல்ஏ மு.பெ.கிரி, டிஆர்ஓ ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன் வரவேற்றார். நிகழ்ச்சியில், பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

கடந்த 2006-2011ல் உணவுத்துறை அமைச்சராக பணியாற்றிபோது, பகுத்தறிவு சிந்தனையுடன் நடைபெறும் தமிழர் பண்பாட்டு விழாவான தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக, அப்போது 1.85 கோடி ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க கலைஞர் உத்தரவிட்டார். இத்திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பை நான் பெற்றேன். அதில், முந்திரி, ஏலக்காய், வெல்லம், பச்சரிசி போன்றவை இடம் பெற்றன.
கலைஞர் வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழர் திருநாளுக்கு அனைத்து குடும்பங்களுக்கும் தனது ஒரே கையெழுத்து மூலம் ரூ.3 ஆயிரம் வழங்கியிருக்கிறார். எனவே, குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கி பண்பாட்டு பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம், மாநிலத்தின் பொருளாதாரம் வளர வேண்டும் என சிலர் கருதுவார்கள். ஆனால், மாநிலத்தின் வளர்ச்சியையும், ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சியையும் தனது இரண்டு கண்களாக கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின இரவு பகல் பாராமல் உழைக்கிறார். அதனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களின் பொருளாதாரமும் உயர்ந்திருக்கிறது. தற்ேபாது, கடன் வாங்கி பொங்கல் விழா கொண்டாட வேண்டிய நிலையில்லை. மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்காவிட்டால் அவசர தேவைக்கு கடன் வாங்க வேண்டியிருக்கும். அந்த நிலையும் தவிர்க்கப்பட்டுள்ளது. அதற்காக, அயராது உழைக்கும் முதல்வரின் கரத்தை பலப்படுத்த, நன்றி உணர்வை காட்ட அவரை ஆதரிக்க வேண்டும். அனைவரும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள ரேஷன் கடை, சாரோன் பகுதி ரேஷன் கடை மற்றும் காந்தி நகர் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். விழாவில், மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மேயர் நிர்மலாவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம். மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், மாநில தொமுச செயலாளர் க.சவுந்திராஜன், அவைத்தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் மெய்யூர் சந்திரன், ரமணன், பகுதி செயலாளர் குட்டி புகழேந்தி, துணை மேயர் ராஜாங்கம், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் துரைவெங்கட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: