தாட்கோ திட்டத்தில் சுய தொழில் தொடங்க ரூ.71.18 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது ரூ.22.59 கோடி மானியம் பெற்று 3291 பேர் பயன் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஜன. 8: திருவண்ணாமலை மாவட்டத்தில், தாட்கோ திட்டத்தின் மூலம் 3291 பேருக்கு ரூ.29.59 கோடி மானியத்துடன் ரூ.71.18 கோடி சுய தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக, ெபாருளாதார மேம்பாட்டுக்காக, தமிழ்நாடு அரசு சார்பில் தாட்கோ நிறுவனத்தை கலைஞர் உருவாக்கினார். அதன்மூலம், தொடர்ந்து எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதனால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் வாழ்வு மேம்பட்டிருக்கிறது. குறிப்பாக, திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த நான்கரை ஆண்டுகளாக, எல்லார்க்கும் எல்லாம் எனும் இலக்கின்படி அனைத்தத்தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் எனும் தாட்கோ நிறுவனம் மூலம், நிலம் வாங்குதல், தொழில் தொடங்குதல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான உதவிகள், மருத்துவர்கள் போன்றோருக்கு சுய தொழில் தொடங்கும் நிதி உதவி போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்கள் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில், தாட்கோ சார்பாக முதலமைச்சரின் ஆதி திராவிடர் மற்றும் பொருளாதாரத்திற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் மானியமாக 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், புதிய சுய தொழில் துவங்க கடந்த 2021 முதல் தற்போது வரை 1833 நபர்களுக்கு ரூ.22.06 கோடி அரசு மானியத்துடன் ரூ.58.42 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. விவசாய தொழிலார்களாக உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தை சார்ந்த பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் வகையில், நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், இரண்டரை ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். பெண்கள் இல்லாத குடும்பங்களில் விவசாயத்தை தொழிலாக கொண்ட கணவன் அல்லது மகன்களுக்கும் வழங்கப்படும்.

மேலும், மானியமாக 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தற்போதுவரை 5 மகளிருக்கு ரூ.19 லட்சம அரசு மானியத்துடன் ரூ.37 லட்சம் கடன் அளிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பெண்கள் நில உடமையாளர்களாக உயர்த்தப்பட்டு, அவர்களின் சமூகநிலை மற்றும் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. பிரதமரின் ஆதி திராவிடர்களுக்கான முன்னேற்ற திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தை சார்ந்தவர்கள் விவசாயம் மற்றும் சுயமாக சிறு தொழில்கள் தொடங்க மானியமாக 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், தற்போதுவரை புதிய தொழில் தொடங்க 1458 நபர்களுக்கு ரூ.7.53 கோடி அரசு மானியத்தில் ரூ.12.76 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தாட்கோ சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் www.tahdco.com என்ற இணைதள முகவரியில் சாதி, வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், சுயதொழில் செய்ய தேவையான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரை மேம்பாடுத்த தாட்கோ சார்பாக நிைறவேற்றப்படும் திட்டங்களால் பயன்பெற்றுள்ளவர்கள் அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: