திருவண்ணாமலை, ஜன.3: வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்று, அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டுச்சான்றுகளை கலெக்டர் வழங்கினார். தமிழ்நாடு அரசு நடத்தும் அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு உள்ளிட்ட வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற செய்வதற்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. போட்டித் தேர்வு பயிற்சிக்கான அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மூலம் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதோடு, போட்டித் தேர்வுக்கு உதவும் புத்தகங்கள், வினா விடை வங்கிகள் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள், அரசின் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர். அதன்படி, போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது.
அப்போது, போட்டித் தேர்வுகளில் வென்றவர்களுக்கு பாராட்டுச்சான்றுகளை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கி பேசியதாவது: மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், அரசு வேலைவாய்ப்பை பெற முயற்சிக்கும் பட்டதாரிகளுக்காகவும், இளைஞர்கள் தொழில் புரியவும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறது. மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அரசு சார்பில் சிறந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்பட்டுவருகிறது. போட்டி தேர்வுகளில் வெற்றி பெற நூலகங்களும், இணையதள வசதிகளும் உள்ளது. எனவே, இந்த வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆர்வமும், ஈடுபாடும் கொண்டு போட்டித் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டால், வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளின்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 பேர், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 5 பேர், தமிழ்நாடு சிருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 8 பேர் உள்பட 19 மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோகன்ராஜ், விஜயலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
