பட்டன்ரோஸ் கிலோ ரூ.80க்கு விற்பனை

தர்மபுரி ஜன.8: தர்மபுரி பூ மார்க்கெட்டில் பட்டன் ரோஸ் வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனையானது. தர்மபுரி மாவட்டம், தொப்பூர், நல்லம்பள்ளி, ஜருகு, தொப்பையாறு, மாரண்டஅள்ளி, பாலக்கோடு, புலிகரை, செல்லியம்பட்டி, இண்டூர் ஆகிய பகுதிகளில் சாமந்தி பூக்கள் மற்றும் பட்டன் ரோஸ் ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்படுகிறது. மாலைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் இந்த பட்டன்ரோஸ் பூக்களுக்கு எப்போதும் மவுசு உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் சாமந்தி, பட்டன் ரோஸ் வரத்து மார்க்கெட்டுக்கு அதிகரித்தது. வழக்கத்திற்கு மாறாக, தர்மபுரி மார்க்கெட்டிற்கு நேற்று பட்டன்ரோஸ் அதிகாலை சுமார் 200 கிலோவுக்கும் மேல் வந்தது. இதனால் பூக்களை மலை போல் குவித்து வியாபாரிகள், விவசாயிகள் விற்பனை செய்தனர். ஒரு கிலோ பட்டன் ரோஸ் ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்தனர். வழக்கமாக ஒரு கிலோ பட்டன்ரோஸ் ரூ.200க்கு விற்பனையாகும். நேற்று வரத்து அதிகமானதால் விலை குறைந்தது.

Related Stories: