குளிர்பான குடோனில் கொள்ளை முயற்சி சிசிடிவி கேமிராவை உடைத்து அட்டூழியம்

கோவை, ஜன. 9: குளிர்பானம் குடோனில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட திருடர்கள் சிசிடிவி கேமிராவை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூர் நாகம்மாள் வீதியை சேர்ந்தவர் ராபின்ராய் (41). இவர், காட்டூர் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில், பிரபல நிறுவனத்தின் குளிர்பானம் விற்பனை மையம் வைத்துள்ளார். இதற்காக பெரிய குடோன் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வேலை முடிந்து ஊழியர்கள் அனைவரும் குடோனை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். அப்போது குடோனை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் அங்கு பொருட்களை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். தொடர்ந்து மேஜை டிராயரை உடைத்து அதில் பணத்தை திருட பார்த்து உள்ளார்.
ஆனால் பணம் எதுவும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த திருடன், அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராக்களை அடித்து உடைத்து தப்பி சென்றார்.

குடோனில் கொள்ளை முயற்சி நடந்ததை பார்த்த ஊழியர் வினோத் என்பவர் உரிமையாளர் ராபின்ராய்க்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து ராபின்ராய் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோனில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Related Stories: