சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 49வது சென்னை புத்தகக் காட்சி நாளை தொடங்குகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஜனவரி மாதம் புத்தகக் காட்சியை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக 49வது புத்தகக் காட்சி நாளை தொடங்குகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை 6 மணி அளவில் தொடங்கி வைக்கின்றனர். இதற்கான விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
புத்தகக் காட்சி குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சண்முகம் கூறியதாவது: ஆசியா கண்டத்தின் மிகச் சிறந்த புத்தகத் திருவிழாவாக கருதப்படும் சென்னை புத்தகக் காட்சிநாளை தொடங்கி 21ம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். 19ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 2026ம் ஆண்டுக்கான பபாசி விருதுகளை வழங்கி பதிப்பாளர்களை கவுரவிக்கிறார்.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டின் புத்தகக் காட்சியின் இறுதி நாள் வரையில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் பார்வையாளர்கள் பார்வையிடலாம். மேலும், பார்வையாளர்கள் எந்த நுழைவுக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. புத்தகக் காட்சியில் 1000க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. தமிழ் மொழிக்காக 428, ஆங்கில மொழி அரங்குகள் 256, பொது அரங்குகள் 24 இடம் பெறுகின்றன. தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் புத்தக நிறுவனங்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்த உள்ளன. ஜப்பான் மொழிக்காக ஒரு அரங்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தபால் துறைக்காக இரண்டு அரங்குகள், ஒதுக்கப்பட்டு அதில் ஒரு அரங்கில் ஆதார் அட்டை குறித்த அனைத்து விளக்கங்கள் மற்றும் பார்சல் சேவைகள் செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
புத்தகக் காட்சிக்கு கட்டணம் இல்லை என்றாலும், வீட்டில் இருந்தபடியே இலவச டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர பள்ளி மாணவ, மாணவியர் புத்தகக் காட்சியை கண்டு ரசிக்கவும், புத்தகங்கள் குறித்து அறிந்துகொள்ள வசதியாக இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 9ம் தேதி முதல் தினமும் பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், தமிழ் வார்த்தை அமைத்தல் போன்ற போட்டிகள் நடக்க இருக்கிறது. 25 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலவச டிக்கெட்டுகள் வழங்க 9 விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
