இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இந்தியப் பெருங்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலை கொண்டு இருப்பதால் இன்றும் நாளையும் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் 9, 10ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் – தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நேற்று முன்தினம் மாலையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அது அதே திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதேபோல லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பனி மூட்டம் காணப்படும். இதேநிலை நாளையும் நீடிக்கும். 9ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. அதன் தொடர்ச்சியாக 10ம் தேதியில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும், 11ம் தேதி 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Related Stories: