கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய அனல் மின் நிலைய திட்டங்களை விரைவுப்படுத்த முடிவு: தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தகவல்

 

சென்னை: தமிழகத்தில் கோடைக்காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அனல் மின்நிலைய திட்டங்களை விரைவுப்படுத்த திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வடசென்னை அனல்மின் நிலையம்-1 மற்றும் 2, தூத்துக்குடி அனல் மின் நிலையம், மேட்டூர் அனல் மின் நிலையங்கள் சுமார் 4 ஆயிரத்து 320 மெகாவாட் மின் உற்பத்தி நிறுவு திறன்களை பெற்றுள்ளன. இதன்மூலம், நாள்தோறும் சுமார் 3 ஆயிரம் மெகாவாட் வரையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவற்றை தவிர, காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம், நிலக்கரி என அரசு மற்றும் தனியார் ஆகியவற்றிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு மின்சாரம் கொள்முதல் செய்து வருகிறது.

இதன்மூலம், தமிழ்நாட்டின் அன்றாட மின்சார தேவை 16 ஆயிரம் மெகாவாட் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெப்பத்தின் காரண மாக, ஒவ்வொரு ஆண்டும் மின்சார தேவை அதிகரித்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி, கோடை கால உச்சபட்சமாக மின் தேவையாக 17 ஆயிரத்து 563 மெகாவாட் இருந்தது. அதே போல், 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி, உச்சபட்ச மின் தேவையாக 19 ஆயிரத்து 387 மெகாவாட் இருந்தது. தற்போது, இந்தாண்டு வரக்கூடிய கோடைக்காலத்தில் தடையின்றி மின்சாரத்தை நுகர்வோருக்கு அளிக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை மின்வாரியம் தரப்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, உடன்குடி அனல் மின் நிலைய திட்டம் (660 மெகாவாட் திறன்) , வடசென்னை அனல்மின் நிலைய திட்டம் (800 மெகாவாட்) ஆகியவை முழு திறனில் இயங்க தேவையான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: எரிசக்தி துறையின் கீழ் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி மாவட்டம் அமைந்துள்ள உடன்குடியில் அனல்மின்நிலைய திட்டப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. குறிப்பாக, 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளன. இதற்கான சோதனை ஓட்டத்தின் போது 80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டன.

தற்போது இதில் நிலக்கரி இணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், வடசென்னை அனல்மின்நிலையம் திட்டம் என்பது 2024 மார்ச் 7ம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவருகிறது. குறிப்பாக, 860 மெகாவாட் திறனில் செயல்படக்கூடியவை. இதுவரை நடந்த சோதனை மற்றும் பயிற்சி ஓட்டங்களில் 2,905.4 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடைக்காலம் வர இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களே உள்ள நிலையில் தடையின்றி மின்சாரத்தை வழங்கிடும் நோக்கில் இந்த இரண்டு அனல் மின்நிலைய பணிகளை விரைவுப்படுத்தி அதனை செயல்படுத்திட முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றோம். இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.

Related Stories: