நாகர்கோவிலில் நெடுஞ்சாலையில் ராட்சத பள்ளங்களால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

 

நாகர்கோவில்: நாகர்கோவிலில் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாகர்கோவில் காவல்கிணறு – பார்வதிபுரம் சாலை, தேசிய நெடுஞ்சாலையாக இருந்து தற்போது மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மிகவும் முக்கியமான சாலை ஆகும். வெளி மாவட்டங்களில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வாகனங்கள் இந்த சாலை வழியாக தான் செல்கின்றன. இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, உயர்நீதிமன்றம் இது பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்த சாலையில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. எம்.எஸ். ரோடு என அழைக்கப்படும் இந்த சாலையில் வடசேரி சந்திப்பு பகுதி, காசி விஸ்வநாதர் கோயில் சந்திப்பு பகுதி என்பது அதிக நெருக்கடியான பகுதி ஆகும். இந்த பகுதிகளில் விபத்துக்களும் நடந்து உள்ளன. இந்த பகுதியில் தற்போது சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. வடசேரி அண்ணா சிலை சந்திப்பு பகுதியில் சாலை உடைந்து மிகப்பெரிய பள்ளமாக உள்ளது. இதே போல் காசி விஸ்வநாதர் கோயில் சந்திப்பு பகுதியிலும் சாலை உடைந்து அடிக்கடி பள்ளம் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையும் அவ்வப்போது மண் நிரப்பி மண் செய்கிறார்கள். ஆனால் நிரந்தர தீர்வுக்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதே போல் எம்.எஸ். ரோட்டில் இருந்து மாவட்ட நூலகத்துக்கு செல்லும் சாலை சந்திப்பு அருகே பாதாள சாக்கடை குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி ராட்சத பள்ளம் உள்ளது. இது போன்ற குண்டு, குழி காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். வேகமாக வரும் வாகனங்கள் திடீர் பிரேக் அடிக்க பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்கள் நடக்கின்றன. பைக், ஆட்டோக்கள் திடீர் பிரேக் காரணமாக நிலை தடுமாறி கவிழும் நிலை இருக்கிறது. விபத்துக்கள் தொடர் கதையாக நடந்து வரும் நிலையில் உடனடியாக இந்த பள்ளங்களை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கியமான நெடுஞ்சாலை என்பதால் அலட்சியம் காட்டாமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால், உயிர் பலிகள் நிகழ்வதை தடுக்க முடியும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கூறிஉள்ளனர்.

Related Stories: