இஸ்ரோ தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜன.15 பொங்கலன்று அறிவிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

சென்னை: இஸ்ரோ தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜனவரி.15 பொங்கலன்று அறிவிக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒன்றிய அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான (விளம்பர எண்கள்: 331, 332, 335) கணினி வழித் தேர்வை (CBT) வரும் 2026 ஜனவரி 15 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். ஜனவரி 15 என்பது தமிழகத்தின் மிக முக்கியப் திருவிழாவான பொங்கல் திருநாளாகும். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான தேர்வர்களுக்குப் பின்வரும் காரணங்களால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்:

1. போக்குவரத்துத் தட்டுப்பாடு: பொங்கல் திருவிழா காலத்தில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து மிகக் கடுமையான நெரிசலைக் கொண்டிருக்கும். இதனால் மாணவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையங்களை அடைவது சாத்தியமற்றது.

2. கலாச்சார உணர்வு: பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா மட்டுமல்ல, அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். இந்த நாளில் தேர்வு நடத்துவது மாணவர்களின் கலாச்சார உரிமையைப் பறிப்பதாகும்.

3. முரண்பாடான நடைமுறை: தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையம் (IPRC) பொங்கலுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில், மற்றொரு மையமான வி.எஸ்.எஸ்.சி தேர்வை அறிவித்திருப்பது நிர்வாக முரண்பாட்டைக் காட்டுகிறது.மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு தேர்வுத் தேதிகளை அமைப்பது வழக்கம். எனவே, தமிழக மாணவர்களின் நலன் மற்றும் நியாயமான கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 15ல் நடைபெறவுள்ள இத்தேர்வை மற்றொரு தேதிக்குத் தள்ளி வைக்க உடனடியாக ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் மேலான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: