நெல்லை: தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக்கோரி முத்தாலங்குறிச்சயைச் சேர்ந்த காமராசு என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, ஆற்றின் நிலையை ஆய்வு செய்ய ராஜஸ்தானைச் சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திரசிங்கை ஆணையராக நியமித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று ஆத்தூர் அருகே உள்ள மேலாத்தூர் பகுதி வர பாஞ்சான், போ பாஞ்சான் மடை வழியாக ஆற்றுக்குள் நேரடியாக கலக்க கூடிய சாக்கடை கழிவு செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பகுதியில் தண்ணீரை சோதனைக்காக எடுத்து கொண்டனர்.
பின்னர் ராஜேந்திர சிங் கூறியதாவது: தற்போது ஆய்வு செய்த சுமார் 25 இடங்களில் அந்ததந்த இடத்திற்கு ஏற்ப ஆற்றில் தூய்மையை மீட்டெடுக்க அறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்கு ஏற்ப கழிவு நீர் சுத்திகரிப்பு மூலம் அல்லது தனி கழிவு நீர் ஓடை உள்ளிட்டவற்றால் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியும். தாமிரபரணி ஆற்றின் அடையாளம் பாபநாசத்தில் தொடங்கி முடியும் பகுதி வரை தடையின்றி செல்ல வேண்டும். அப்போதுதான் இயற்கை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றுடன் வாழ முடியும். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் உருவாக்கிய பம்பிங் செட், தடுப்பணை உள்ளிட்டவைகளை இயற்கையை தொடர்புபடுத்தி செய்யாததால் தற்போது தாமிரபரணி அழிவு நிலைக்கு சென்றுள்ளது.
அனைவரும் இணைந்து மீட்டெடுப்போம் என கூறினார். தொடர்ந்து தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் புன்னைக்காயல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கடலில் சங்கமிக்கும் இடத்தில் உள்ள கருப்பு மணலையும், அடுத்து உள்ள வெள்ளை மணல் மற்றும் தண்ணீரையும் ஆய்வுக்காக எடுத்தனர். தொடர்ந்து வறண்ட இடங்களில் 23 நதிகளை மீட்டு கொடுத்துள்ளேன். தற்போது உயிருக்கு போரடிக் கொண்டிருக்கும் பசுமை தன்மை கொண்ட பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றை அனைவரும் ஒன்றிணைந்து மீட்போம் என கூறினார்.
