டெல்லி: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
தமிழகத்தில் கடுமையான குளிர் நிலவி வரும் நிலையில் அதற்கு விடை கொடுத்து மழையை வரவேற்பதற்கான காலநிலை மாற்றம் தொடங்கி இருக்கிறது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக குளிர் அதிகமாக இருந்தது. காலை நேரங்களில் பல இடங்களில் பனிமூட்டமும் காணப்பட்டது. இப்படியிருக்க, இப்போது வானிலை மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் மழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது.
தெற்கு கேரளக் கடலோரத்தை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. அதே நேரத்தில், வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதி மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதனுடன், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் தனித்தனி கீழடுக்கு சுழற்சிகள் உருவாகியுள்ளன என்று வானிலை துறை தெரிவித்துள்ளது.
இந்த வானிலை மாற்றங்களின் தாக்கமாக, பூமத்திய ரேகையை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் வாய்ப்பு உள்ளது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
