இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பகையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கோருவது தேசத் துரோகம் அல்ல : ஐகோர்ட் அதிரடி

சிம்லா : இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பகை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கோருவது தேசத் துரோகம் அல்ல என்று இமாச்சலப் பிரதேச மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளமான முகநூலில் பாகிஸ்தான் கொடி மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் படங்களை பதிவேற்றியதாக கூறி, அபிஷேக் சிங் என்பவர் மீது சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்ததாகவும் பாகிஸ்தான் நபருடன் உரையாடியதாகவும் குற்றம் சாட்டப்பபட்டது. இதனையடுத்து கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது அபிஷேக் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி இமாச்சலப் பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் வீணானது என்றும் இரு நாடுகளும் பகைமையை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது எந்த விதத்திலும் தேசத் துரோகம் ஆகாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், “குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சட்ட விரோதமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. அவரது சமூக வலைதளப் பதிவுகளில் இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் அல்லது வன்முறையைத் தூண்டும் கருத்துக்கள் எதுவும் இல்லை. மதப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், போர் வேண்டாம் என்று பேசுவது அமைதிக்கான குரலே தவிர நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல”, என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: