ஐதராபாத்: போதைப்பொருள் வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட புகாரை ரத்து செய்யக்கோரி பிரபல நடிகையின் சகோதரர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரரும், தெலுங்கு மற்றும் இந்தி நடிகருமான அமன் பிரீத் சிங் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐதராபாத் மசாப் டேங்க் காவல் நிலையத்தில், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணையில், அமன் பிரீத் சிங் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்றும், அவரிடமிருந்து கோகைன் மற்றும் எம்.டி.எம்.ஏ போன்ற செயற்கை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இவர் ஏற்கனவே 2024ம் ஆண்டு சைபராபாத் போலீசாரால் இதேபோன்ற ஒரு போதைப்பொருள் வழக்கில் இவர் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வரும் அமன் பிரீத் சிங், தன் மீதான முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) ரத்து செய்யக்கோரி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். அவரது வழக்கறிஞர் வாதாடுகையில், ‘இந்த குற்றவியல் நடவடிக்கை சட்டப்படி நிலைக்கத்தக்கதல்ல, எனவே மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமலா தேவி ஈடா, இதுகுறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே இந்த வழக்கில் நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
