மும்பை: வெனிசுலாவில் நடந்தது போல் டிரம்ப் நமது பிரதமரைக் கடத்திச் செல்வாரா? என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவான் கேட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வெனிசுலாவில் இரவு நேரத்தில் அமெரிக்க ராணுவம் புகுந்து அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்தது. இதுபற்றி மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், மூத்த காங். தலைவருமான பிருத்விராஜ் சவான் கூறியதாவது:
வெனிசுலாவில் நடந்தது போன்ற ஒன்று இந்தியாவில் நடக்குமா? டிரம்ப் நமது பிரதமரைக் கடத்திச் செல்வாரா? அமெரிக்காவுடன் 50 சதவீத வரியுடன் வர்த்தகம் என்பது சாத்தியமே இல்லை. உண்மையில், இது இந்தியா-அமெரிக்க வர்த்தகத்தைத் தடுப்பதற்குச் சமம், குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குச் செய்யப்படும் ஏற்றுமதியைத் தடுக்கிறது.
நேரடியாகத் தடை விதிக்க முடியாததால், வர்த்தகத்தை நிறுத்த ஒரு கருவியாக வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதை இந்தியா தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நமது மக்கள் முன்பு ஈட்டிய லாபம் இனி கிடைக்காது. நாம் மாற்றுச் சந்தைகளைத் தேட வேண்டும், அந்த திசையில் முயற்சிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கூறினார்.
பிருத்விராஜ் சவானின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. காஷ்மீர் முன்னாள் காவல்துறை அதிகாரி எஸ்.பி. வைத் இதுகுறித்து கூறுகையில்,’ முழு நாட்டிற்கும் அவமானகரமான ஒரு கருத்தை பிருத்விராஜ் சவான் தெரிவித்துள்ளார். வெனிசுலா மற்றும் மதுரோவுக்கு டிரம்ப் செய்ததை மோடிக்கும் செய்ய வேண்டும் என்று நினைப்பது இந்த முழு நாட்டிற்கும் அவமானகரமானது. இதுதான் காங்கிரஸின் உண்மையான சித்தாந்தமா?’ என்று கேள்வி எழுப்பினார்.
