புதுடெல்லி: டெல்லி ஆதர்ஷ் நகரில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மெட்ரோ நிர்வாக அதிகாரி, அவருடைய மனைவி, மகள் பலியாகினர். டெல்லியில் உள்ள ஆதர்ஷ் நகரில் மெட்ரோ ரயில் நிர்வாக ஊழியர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 5வது மாடியில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்புத் துறை வீரர்கள் விபத்து ஏற்பட்ட தளத்தில் சென்று பார்த்த போது 3 பேர் படுக்கையறையில் சடலமாக கிடந்தனர். அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரித்தனர். தீ விபத்தில் உயிரிழந்த அஜய் விமல் (45 ), உதவி பிரிவு பொறியாளராக மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அவருடைய மனைவி நீலம் (38), அவர்களுடைய 10 வயது மகள் ஜான்வி ஆகியோர் இறந்தது தெரிய வந்தது. ஹீட்டரில் ஏற்பட்ட மின்சாரக் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
