திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வரும் 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக சபரிமலையில் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்தனர். பம்பை முதல் சன்னிதானம் வரை எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாக காணப்பட்டன. சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக கடந்த இரு தினங்களாக பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சிறிய சிறிய குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் 1 லட்சத்திற்கும் அதிகமானோரும், நேற்று சுமார் 1.20 லட்சம் பேரும் தரிசனம் செய்தனர்.
மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இப்போதே பக்தர்கள் ஜோதியை தரிசிப்பதற்காக தயாராகி வருகின்றனர். பாண்டித்தாவளம் உள்பட பல்வேறு பகுதிகளில் மகரஜோதியை தரிசிப்பதற்காக பக்தர்கள் குடில் கட்டத் தொடங்கி விட்டனர். வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
