டிரம்ப்பின் அடுத்த குறி கிரீன்லாந்து? உலக நாடுகள் அதிர்ச்சி

நூக்: வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாகக் கைது செய்து, அந்நாட்டைத் தற்காலிகமாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அடுத்த குறி கிரீன்லாந்து தீவாக இருக்கலாம் என்ற கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதலே டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பகுதியான கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்கத் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் கிரீன்லாந்துக்கான சிறப்புத் தூதராக லூசியானா கவர்னர் ஜெப் லேண்ட்ரியை டிரம்ப் நியமித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி பத்திரிகை ஒன்றுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், ‘எங்களுக்கு கிரீன்லாந்து கண்டிப்பாகத் தேவை, பாதுகாப்பு காரணங்களுக்காக அதை எடுத்துக்கொள்வோம்’ எனக் கூறியிருந்தார். இது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் டென்மார்க் பிரதமர் மெட்டே ப்ரெட்ரிக்சன், ‘அமெரிக்காவின் இந்தச் செயல் அபத்தமானது மற்றும் அர்த்தமற்றது. கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல; நேச நாடாகத் திகழும் எங்களை மிரட்டுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும், கிரீன்லாந்து ஏற்கனவே நேட்டோ அமைப்பில் உள்ளதால், அமெரிக்காவிற்குப் போதுமான பாதுகாப்பு உள்ளது’ என்றாா்.

Related Stories: