வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்; 24 மணி நேரத்தில் 2 இந்துக்கள் படுகொலை: பதற்றம் அதிகரிப்பால் இந்தியா கவலை

 

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் இரண்டு இந்துக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக இந்துக்கள் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு இறுதி முதல் 2026ம் ஆண்டுத் தொடக்கம் வரையிலான 18 நாட்களில் மட்டும் 6 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மைமன்சிங் மற்றும் ராஜ்பாரி பகுதிகளில் அமிர்த் மண்டல், திபு சந்திர தாஸ் ஆகியோர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர். டிசம்பர் 31ம் தேதி பஜேந்திர பிஸ்வாஸ் என்ற காவலாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும், புத்தாண்டு தினத்தில் ஷரியத்பூர் பகுதியில் எரித்துக் கொல்ல முயன்றதில் படுகாயமடைந்த கோகன் சந்திர தாஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த 3ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், வன்முறையின் உச்சக்கட்டமாக நேற்று ஒரே நாளில் இருவர் கொல்லப்பட்டனர். ஜேஷோர் மாவட்டத்தில் பத்திரிகை ஆசிரியராக இருந்த ராணா பிரதாப் பைராகி (45) என்பவரை, தொழிற்சாலையிலிருந்து வெளியே வரவழைத்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் படுகொலை செய்தது. அதேபோல், நர்சிங்டி மாவட்டத்தில் மளிகைக்கடை நடத்தி வந்த மோனி சக்ரவர்த்தி (40) என்பவரை, நேற்றிரவு கடையிலிருந்தபோதே மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தனர்.

மேலும் இந்து பெண் ஒருவர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேற்கண்ட குற்ற சம்பவங்களில் தொடர்புடைய சிலரை கைது செய்துள்ளதாக வங்கதேச அரசு கூறினாலும், இந்துகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே ‘சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என வங்கதேச இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தச் சம்பவங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, நிலைமையைக் கவலையுடன் உற்று நோக்கி வருவதாக தெரிவித்துள்ளது.

Related Stories: