வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியப் பெண்ணை கொன்று விட்டு தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் எலிகாட் நகரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் நிகிதா கோடிசாலா (27). இவர் அங்கு இந்திய – அமெரிக்க தரவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். தெலங்கானாவை சேர்ந்த நிகிதா கடந்த 3ஆம் தேதி கொலம்பியா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி மாலை 7 மணியளவில் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் நிகிதாவின் முன்னாள் காதலரான அர்ஜுன் சர்மா (26), கடந்த 2ஆம் தேதி நிகிதாவைக் காணவில்லை எனப் போலீசில் பொய்யான புகார் அளித்துவிட்டு, அதே நாளில் அவர் விமானம் மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்தது. தற்போது நிகிதா கோடிஷாலாவைக் கொலை செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி ஓடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன் சர்மா, தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டார். இந்திய அதிகாரிகளுடன் இணைந்து இன்டர்போல் காவல்துறை அவரை தமிழ்நாட்டில் கைது செய்ததாக தெரிவித்தன. இனிமேல் அர்ஜூன் சர்மா முறையான நடவடிக்கை அடிப்படையில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று தெரிகிறது.
