என்னை மகிழ்ச்சிப்படுத்தாவிட்டால் இந்தியா மீதான வரிகளை விரைவில் உயர்த்த முடியும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடாவில் தனது சொந்த ஊரில் 2 வாரங்கள் தங்கிய பிறகு தலைநகர் வாஷிங்டனுக்கு அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் புறப்பட்டார். அப்போது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இந்தியா அடிப்படையில் என்னை மகிழ்ச்சி அடையச் செய்ய விரும்பினர். மோடி அருமையான மனிதர். மிகவும் நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்கு தெரியும். என்னை மகிழ்ச்சியடைச் செய்வது முக்கியம். அவர்கள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றனர். இதற்காக இந்தியா மீதான வரிகளை மிக விரைவாக உயர்த்த முடியும். அது அவர்ளுக்கு மிகவும் மோசமாக இருக்கும்’’ என்றார்.

அவருடன் இருந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாம், ‘‘அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் தான் இப்போது ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்திருப்பதற்கு முக்கிய காரணம். ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500 சதவீத வரிகள் விதிக்கும் வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்’’ என்றார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதல் 25 வரி உட்பட 50 சதவீத வரிகளை அதிபர் டிரம்ப் ஏற்கனவே விதித்துள்ளார். இதனால் கடந்த மே மாதம் 9 மில்லியன் டன் ரஷ்ய எண்ணெய் வாங்கிய இந்தியா படிப்படியாக குறைத்தது. ஆனால் 6 மாதத்தில் அதிகபட்சமாக கடந்த நவம்பரில் 7.7 மில்லியன் டன் ரஷ்ய எண்ணெய் வாங்கி உள்ளது. அமெரிக்கா வரி விதித்த பிறகும் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி விருவதால் அதிபர் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

* கட்டாய கட்டிப்பிடியின் நன்மை மிகக் குறைவு
இந்தியாவுக்கு எதிராக விரைவில் வரிகளை உயர்த்த முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘வெள்ளை மாளிகையில் உள்ள பிரதமர் மோடியின் நல்ல நண்பர் அதிக வரிகளை விதிப்பதாக மீண்டும் ஒருமுறை மிரட்டி உள்ளார். நமஸ்தே டிரம்ப், ஹவுடி மோடி நிகழ்வுகள், கட்டாய கட்டிபிடிப்புகள் மற்றும் அதிபர் டிரம்பை போற்றும் சமூக ஊடக பதிவுகள் அனைத்தும் மிகக் குறைந்த நன்மையை மட்டுமே செய்துள்ளன’’ என கிண்டல் செய்துள்ளார்.

Related Stories: