ஓய்வு ஊதியம் அறிவித்த முதல்வருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி அறிவிப்பு

 

சென்னை: தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வு ஊதிய திட்டத்தை அறிவித்ததின் மூலம், 22 ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஆசிரியர் அரசு ஊழியர்கள் வாழ்வாதாரத்தை காத்த முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ஒன்றியத்துக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உறுதியளிக்கப்பட்ட ஓய்வு ஊதிய திட்டத்தை தமிழ்நாட்டில் அமுல்படுத்தியுள்ளார். இதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பின் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 2003ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் அமுல்படுத்தப்பட்டது. பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் என்று அதற்கு பெயர் வைத்தாலும் கடந்த 22 ஆண்டு காலங்களாக ஓய்வு ஊதியம் பெறத் தகுதியுள்ள எவர் ஒருவருக்கும் ஓய்வு ஊதியம் வழங்காமல் அவர்களின் பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும் அரசின் தொகையையும் சேர்த்து ஓய்வு ஊதியம் பெறும் போது அவர்களின் கையில் கொடுத்து அனுப்பும் நடவடிக்கை மட்டுமே அமுலில் இருந்தது. இதற்காக கடந்த 22 ஆண்டுகளாக பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வலிமையான போராட்டங்களை நடத்தி வ ந்தோம்.

மீண்டும் ஓய்வு ஊதியத் திட்டம் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தவித்து வந்தோம். கடந்த அதிமுக ஆட்சியில் இந்த ஓய்வு ஊதிய திட்டத்துக்கான போராட்டம் மிகத் தீவிரமாக நடந்த சூழ்நிலையிலும் அதைப்பற்றி சற்றும் கவலைப்படாத அன்றைய ஆட்சியாளர்கள் எங்கள் கோரிக்கைகளையும் எங்களையும் எங்கள் போராட்டங்களையும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றனர். ஆனால் அப்போது எங்களோடு போராட்டக் களத்துக்கு வந்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய தமிழ்நாடு முதல்வர், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று உறுதியளித்தார். அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் புத்தாண்டுப் பரிசாக ஆறரை லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வு ஊதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இன்றைய நாள் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு அமைந்துள்ளது. ஓய்வு ஊதிய திட்டத்தை அறிவித்தவுடன் நேரில் தலைமைச் செயலகம் சென்று எங்களின் நன்றியையும் மகிழ்ச்சியையும் தமிழ்நாடு முதல்வரிடம் நேரில் பகிர்ந்து, எங்களின் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தோம். எங்்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி எங்களுக்கு வாழ்வளித்த தமிழ்நாடு முதல்வருக்கு கோடானு கோடி நன்றியை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், எங்களின் கோரிக்கை தொடர்பாக முதல்வரை அடிக்கடி சந்தித்து வலியுறுத்திய துணை முதல்வருக்கும், பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி மேற்கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர், நிதி அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், ஆகியோருக்கும் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கை மொத்தமும் நிறைவேற்றியது திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின்தான். தொகுப்பூதியத்தில் அதிமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட 53 ஆயிரம் ஆசிரியர்களை கால முறை ஊதியத்தின் கீழ் கொண்டு வந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் புதல்வர் இன்று மீண்டும் ஓய்வு ஊதிய திட்டத்தை அறிவித்துள்ள நிகழ்வு ஒட்டுமொத்த அரசு ஊழியர் ஆசிரியர் எண்ணங்களில் நிரந்தரமான இடத்தை பிடித்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: