மதுரை: ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்ததால், மாணவியின் பட்டத்தை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடியானது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா கடந்த ஆக. 13ல் நடந்தது.
விழாவின்போது ஆளுநர் ஆர்.என்.ரவியிடமிருந்து பட்டத்தை பெற ஒரு மாணவி மறுத்து, துணைவேந்தரிடம் பெற்றுக் கொண்டார். பல்கலைக்கழக சட்டப்படி வேந்தரே பல்கலை தலைவர். அவர் இல்லாதபோது மட்டுமே துணைவேந்தர் பட்டத்தை வழங்க முடியும். எனவே, வேந்தரிடம் பட்டம் பெற மறுத்தது சட்டமீறல். துணைவேந்தரிடம் இருந்து மாணவி பெற்ற பட்டத்தை, ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பதற்காக, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று பட்டியலிடப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கேட்பது போல மாணவி மீது நடவடிக்கை எடுக்க விதிகளில் இடமில்லை எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
