தொட்டில் குழந்தை திட்டம் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

மதுரை:தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் 1992ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பெண் சிசு கொலையை தடுக்க தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகம் செய்தார். இத்திட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொட்டில் வைக்கப்பட்டிருக்கும்.

பெண் குழந்தைகளை வளர்க்க விரும்பாத பெற்றோர், தங்கள் குழந்தையை தொட்டிலில் இடவேண்டும். அந்த குழந்தையை சமூக நலத்துறை தத்தெடுத்து வளர்க்கும். இத்திட்டத்தில் 1992 முதல் கடந்த மார்ச் 2025 வரை மொத்தம் 1,494 ஆண் குழந்தைகள், 4,784 பெண் குழந்தைகள் உட்பட மொத்தம் 6,278 குழந்தைகளை அரசு தத்தெடுத்துள்ளது.

இதில் 4,831 குழந்தைகள் இந்திய பெற்றோருக்கும், 358 குழந்தைகள் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது. 145 சிறப்பு குழந்தைகள் தத்து கொடுக்கப்படாமல் விடுதிகளில் இருக்கிறார்கள். 944 குழந்தைகள் குறித்து எவ்விதமான விபரங்களும் அரசிடம் இல்லை.

இத்திட்டத்தில் தத்து கொடுக்கப்பட்ட 5,189 குழந்தைகளின் தற்போதைய நிலை, போதிய விபரங்கள் இல்லாத 944 குழந்தைகளின் தற்போதைய நிலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், தொட்டில் குழந்தை பிரச்னை குறித்து ஆராய அரசு இயந்திரங்களே போதுமானதாக உள்ளது. இதனால் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Related Stories: