திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லாது: வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விளக்கம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லாது என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் வழக்கில் இடையீட்டு மனுதாரரான அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கில் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இது செல்லத்தக்க தீர்ப்பு அல்ல.

அரசியல் சட்டப்படியான தீர்ப்பும் அல்ல. ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள், 3 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை பரிசீலிக்க முடியுமா என்றால் முடியவே முடியாது. இன்று (நேற்று) மாலையே தீபம் ஏற்ற நீதிபதி தீர்ப்பு வழங்குவார்கள் என சங் பரிவார் அமைப்புகள் எதிர்பார்த்தன. உடனே தீபம் ஏற்ற வேண்டும் என்ற சிக்கல் இப்போது இல்லை. நடப்பாண்டு கார்த்திகை மாதத்தில் தான் இந்த நடைமுறை குறித்து விவாதிக்கப்படும்.

இந்த தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லத்தக்கது அல்ல. கோயில் நிர்வாகம் தூண் குறித்து நிரூபிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது விசித்திரமாக உள்ளது. ஏற்கனவே, திருப்பரங்குன்றத்தில் ஆடு, கோழி பலியிடுவது தொடர்பான வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த 3 நீதிபதிகளின் தீர்ப்பு, தற்போதைய இரு நீதிபதிகளின் தீர்ப்பை கட்டுப்படுத்தும்.

நீதிமன்றத்திற்கு யார் வருகிறார்களோ அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும். மனுதாரர் ராம.ரவிக்குமார் இதுவரை நிரூபிக்கவில்லை. அரசியலமைப்பு சட்டம் 25ன் படி மத உரிமை அனைவருக்கும் பொதுவானது. ஆடு, கோழி பலியிட உரிமையியல் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றால், இதற்கும் அங்கு தானே செல்ல வேண்டும்? 3 நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக 2 நீதிபதிகள் எப்படி தீர்ப்பு வழங்க முடியும்?

1862, 1912 ஆகிய ஆண்டுகளில் தூணில் தீபம் ஏற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் அன்றைய ஆட்சியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு கார்த்திகை தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்பதை 1920 தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டு, அப்போதே உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி எப்படி இப்போது இரு நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்க முடியும்? தூணில் தீபம் ஏற்ற வேண்டியதில்லை என 2014ல் நீதிபதி வேணுகோபால் வழங்கிய தீர்ப்பையும், அப்போதே இரு நீதிபதிகள் ஏற்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இரு நீதிபதிகளின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் அதிகாரம், மற்றுமொரு இரு நீதிபதிகள் அமர்வுக்கு கிடையாது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தான் அதிகாரம் உண்டு. அரசு இந்த பிரச்னையை பெரிதாக்கவில்லை. மாறாக, மதுரையில் கலவரம் ஏற்படும் சூழலை தடுத்துள்ளனர். இந்த தூண் கோயிலுக்கு சொந்தம் என இப்போது தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அது தீபத்தூணா, இல்லையா என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்து மத வழிபாட்டு முறைக்கும், தூணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொல்லியல் துறையை கேட்டு இங்கு முடிவெடுப்பது என்பது வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானது. தமிழ் சமூகம் அறிவார்ந்தது. எல்லாவற்றையும் மக்கள் கடந்து செல்வார்கள். இவை இந்து – முஸ்லிம் உறவை எதுவும் செய்யாது. இவ்வாறு தெரிவித்தார்.

* ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள், 3 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை பரிசீலிக்க முடியுமா என்றால் முடியவே முடியாது.

* ஆடு, கோழி பலியிடுவது தொடர்பான வழக்கில் 3 நீதிபதிகளின் தீர்ப்பு, தற்போதைய இரு நீதிபதிகளின் தீர்ப்பை கட்டுப்படுத்தும்.

* கோயில் நிர்வாகம் தூண் குறித்து நிரூபிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது விசித்திரமாக உள்ளது.

Related Stories: