இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் 1965 பொள்ளாச்சியில் நடந்தது என்ன? பராசக்தி படத்தால் மீண்டும் பேசுபொருளாகும் சோக வரலாறு

கோவை: பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளால், 1965ல் பொள்ளாச்சியில் நடந்த இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் மீண்டும் பேசுபொருளாகி வருகிறது. தமிழ்நாட்டில் 1960களில் இந்தி திணிப்பிற்கு எதிராக நடந்த போராட்டங்களை மையமாக வைத்து சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் வருகிற 10ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பரவலான கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதில், போலீஸ் அதிகாரியாக வரும் ரவிமோகன், ‘‘பொள்ளாச்சியிலேயே அடிச்சி பொள்ளாச்சியிலேயே புதைப்போம்’’ என பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த சம்பவங்களை அறிய பலரும் ஆர்வம் காட்டுவதால் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. இதுகுறித்து புலவர் செந்தலை ந.கவுதமன் கூறியதாவது: தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராக 1938, 1948, 1965, 1986 ஆகிய ஆண்டுகளில் 4 முறை போராட்டங்கள் நடந்துள்ளன.

1938 துவங்கி 1940 வரை ஒன்றரை ஆண்டுகள் பெரியார் வழிநடத்திய இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள், தமிழை மட்டுமின்றி அனைத்து மாநில மொழிகளையும் பாதுகாத்தது. இந்தி ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டதற்கு எதிராக 1965ல் வெடித்த மொழிப்போர் போராட்டத்தின் உச்சமாக கருதப்படும் மாணவர் புரட்சி, 50 நாட்கள் மட்டுமே நடந்தது. இந்த போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களமிறக்கப்பட்டது.

பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடுகளில் பலர் கொல்லப்பட்டனர். அதில் அதிகமான மக்கள் பலியானது பொள்ளாச்சியில்தான். தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக்குழு அறிவித்தபடி, 1965 பிப்ரவரி 12ம் நாள் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தது. அன்றைய தினம், உள்ளூர் மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொள்ளாச்சி நகரிலும் முழுக்கடையடைப்பு நடந்தது.

அப்போது அஞ்சலகம் முன்பு கூடிய மாணவர்களும், பொதுமக்களும் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் ‘இந்தி ஒழிக’ என்றபடி அஞ்சலகப் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழித்தான். அங்கு இருந்த ராணுவத்தினர் எந்தவித எச்சரிக்கையும் செய்யாமல், துப்பாக்கியால் சுட்டனர். அதில் அந்த மாணவன் குருவி போல துடிதுடித்து விழுந்து இறந்தான்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கூட்டம் ராணுவத்தினரை நோக்கி கற்களை வீசி விரட்டியது. இதனால் ஆத்திரம் அடைந்த ராணுவத்தினர் இயந்திர துப்பாக்கியால் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதால், நகரமே போர்க்களமாக மாறியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு, பொள்ளாச்சியை ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

அறிவிக்கப்படாத ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இரவு வெளியே வந்த இளைஞர்கள் எல்லாம், ராணுவத்தினரால் தாக்கப்பட்டு, காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர். ஏறத்தாழ 12 நாட்கள் பொள்ளாச்சி நகரக் காவல் ராணுவத்தினரிடம் இருந்தது. பொள்ளாச்சியில் அன்று நடந்த சந்தைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்களும், இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அதனால் உயிரிழந்தவர்கள் யார், யார் என்ற முழு விவரம் கிடைக்கவில்லை.

அந்த விவரங்களை சேகரிக்க அன்றைய அரசும், ராணுவத்தினரும் விடவில்லை. எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது மூடி மறைக்கப்பட்டது. இவை தொடர்பான கோப்புகள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. தெருவிலே கிடந்த பிணங்களை எவரும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிணங்களை எல்லாம் சேகரித்த ராணுவத்தினர் பொள்ளாச்சி – பழனி சாலையில் உள்ள சுடுகாட்டில் புதைக்கவும், எரிக்கவும் செய்தனர்.

சுடுகாட்டைச் சுற்றிலும் ராணுவத்தினரும் துப்பாக்கி பிடித்த காவலரும் நின்று காவல் காத்தனர். பிணங்கள் எரிக்கப்பட்ட அன்று, அந்த பக்கத்தில் எவரும் அனுமதிக்கப்படவில்லை. பொள்ளாச்சி சுடுகாட்டில் பிணங்கள் எரிக்கப்பட்டது போக, மற்றவை ராணுவ வண்டிகளில் ஏற்றப்பட்டு, மதுக்கரை ராணுவ மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டன. அப்போது மக்களிடம் இருந்த அச்சம் காரணமாக தங்களது வீட்டில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை வெளிப்படுத்தவில்லை.

இதனை அப்போது துப்பாக்கி சூடு நடத்திய ஒரு அதிகாரி, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புதல் வாக்குமூலம் மூலம் உறுதி செய்துள்ளார். ஆனால், அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலம் வெறும் 20 பேர் மட்டுமே பொள்ளாச்சியில் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதேபோல மற்ற ஊர்களிலும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை குறைத்து காண்பிக்கப்பட்டது.

50 நாட்கள் நடந்த இந்த போராட்டத்தில், 18 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் செயலற்று இருந்தது. அரசு இயந்திரம் முழுமையாக முடங்கியது. இதனால் இந்தி திணிப்பில் இருந்து பின்வாங்கிய ஒன்றிய அரசு, ஆங்கிலம் தொடர்ந்து அலுவல் மொழியாக இருக்கும் என அறிவித்தது. ஆனால் இந்த போராட்டத்தில் பெரும் இழப்பை சந்தித்த பொள்ளாச்சியில், மொழிப்போர் தியாகிகளுக்கு எந்த நினைவு சின்னமும் இல்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித உதவித்தொகையும் கிடைக்கவில்லை. இருப்பினும் உயிரை கொடுத்து தமிழ் மொழியை காத்த ஊர் என பொள்ளாச்சி வரலாற்றில் நினைவு கூரப்பட்டு வருகிறது. இதனை மையமாக கொண்டு உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் வரவேற்க வேண்டியது.
இவ்வாறு அவர் கூறினார்.

* இந்தி திணிப்புக்கு எதிராக 50 நாட்கள் நடந்த இந்த போராட்டத்தில், 18 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் செயலற்று இருந்தது. இதனால் இந்தி திணிப்பில் இருந்து பின்வாங்கிய ஒன்றிய அரசு, ஆங்கிலம் தொடர்ந்து அலுவல் மொழியாக இருக்கும் என அறிவித்தது.

* ராணுவத்தினர் இயந்திர துப்பாக்கியால் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதால், நகரமே போர்க்களமாக மாறியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். ஏறத்தாழ 12 நாட்கள் பொள்ளாச்சி நகரக் காவல் ராணுவத்தினரிடம் இருந்தது.

Related Stories: