மாமல்லபுரத்தில் மழைநீர் வடிகால்வாய் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள்: அகற்றி வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தல்

 

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ரூ.3.40 கோடியில் மழைநீர் வடிகால்வாய் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள், மின்பெட்டிகளை அகற்றாமல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், வடிகால்வாய் பணி தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரம் நகராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.

இங்கு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும், பேரூராட்சி கடந்த 11 மாதங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சிக்கு உட்பட்ட திருக்கழுக்குன்றம் சாலையில் கடந்த 1996-1997ம் ஆண்டு மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது.

பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கால்வாயை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால், மழைநீர் கால்வாய் சேதமடைந்து அலங்கோலமாக காணப்பட்டது. இந்த மழைநீர் வடிகால்வாயை இடித்து அப்புறப்படுத்தி, புதிய கால்வாய் கட்ட வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்று, 5 மற்றும் 7வது வார்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க செயல்பாடு மற்றும் பராமரிப்பு பற்றாக்குறை நிதியாக ரூ.3.40 கோடியை நகராட்சி அதிகாரிகள் ஒதுக்கினர். இந்நிலையில், முதற்கட்டமாக 5வது வார்டில் பழைய மழைநீர் வடிகால்வாயை அகற்றி சென்னை மாநகராட்சியில் உள்ளது போன்று புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

இப்பணியில், 40க்கும் மேற்பட்ட தனியார் ஊழியர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இப்பணி தொடங்குவதற்கு 20 நாட்களுக்கு முன்பே இடையூறாக உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின்பெட்டிகளை அகற்றி வேறொரு இடத்தில் பாதுகாப்பாக அமைக்க வேண்டும் என மாமல்லபுரம் மின்வாரிய அலுவலகத்துக்கு முறையாக கடிதம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனாலும், மாமல்லபுரம் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரில் வந்து பார்வையிடாமலும், மின் கம்பங்கள் மற்றும் மின்பெட்டிகளை துரிதமாக செயல்பட்டு அகற்றாமலும் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும், மழைநீர் வடிகால்வாய் அமையும் இடத்தில் பூமிக்கு அடியில் தாறுமாறாக மின் வயர்கள் இருப்பதால், கால்வாய் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிர் பலி ஏற்படுமோ என்ற உயிர் பயத்துடன் வேலை செய்து வருகின்றனர்.

மேலும், அருகில் உள்ள பொதுமக்களும் தாறுமாறாக கிடக்கும் மின்வயர்களால் அச்சமடைந்து தங்களது குழந்தைகளை அதன் அருகில் கூட விளையாட அனுமதிப்பதில்லை. இதனால், உயிர் பலி மற்றும் மழைநீர் வடிகால்வாய் பணி தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மின்சாரம் தாக்கி உயிர் பலி ஏற்படுவதற்கு முன் மழைநீர் வடிகால்வாய் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின்பெட்டிகளை அகற்றி வேறொரு இடத்தில் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், மழைநீர் வடிகால்வாய் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின்பெட்டிகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதனால், கால்வாய் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இன்னும், 2 நாட்களில் மின் கம்பங்கள் மற்றும் மின்பெட்டிகளை மாமல்லபுரம் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகற்றவில்லையென்றால் அனைவரையும் ஒன்று திரட்டி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என மின்வாரிய அதிகாரிகளை எச்சரித்துள்ளனர்.

Related Stories: