கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது: திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது

 

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றக் கோரி ராம.ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரை கிளை தனி நீதிபதி சுவாமிநாதன் டிச. 1ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நடைபெற்றது. டிச. 18ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், மேல்முறையீட்டு மனுவின் மீது தீர்ப்பளிப்பதாகக்கூறி நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, திருப்பரங்குன்றம் மலையில் கந்தூரி விழா நடத்த தடை விதிக்கக்கோரி மாணிக்கமூர்த்தி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2ம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, தர்கா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், கந்தூரி விழா நடத்தக்கூடாது எனவும், சந்தனக்கூடு நிகழ்வில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை வழக்கமான வழக்குகளை விசாரித்தனர். அப்போது, திருப்பரங்குன்றம் தர்காவில் கந்தூரி விழா நடத்தக் கூடாது, 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தர்கா தரப்பில் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் பிரபு ராஜதுரை ஆஜராகி முறையிட்டார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவின் மீது நாளை தீர்ப்பளிக்கப்படுகிறது. அதில் முறையீடு செய்யப்பட்டுள்ள விவகாரமும் இருப்பதால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை. தீர்ப்பில் உள்ளதை அறிந்து கொண்ட பின்னர் தேவைப்பட்டால் முறையீடு செய்யலாம்’’ என கூறியுள்ளனர்.

இந்நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது. அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படக்கூடாது. தீபத்தூண் கோயிலுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது. தீபமேற்றும் இடத்தை தர்காவிற்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்றுவது குறித்து பரிசீலிக்க முந்தைய உத்தரவுகள் உள்ளன.

மாவட்ட நிர்வாகம் தீபம் ஏற்ற உதவி செய்ய வேண்டும். பொதுமக்கள் யாரும் தீபத்தூணில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்துடன் செல்லக் கூடாது. தனிநபர் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது. தேவஸ்தானம், மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று தெரிவித்து மேல்முறையீட்டு மனுக்களை முடித்துவைத்தது.

Related Stories: