சென்னை: தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி. திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. தொகுதி பங்கீட்டை விரைவில் இறுதி செய்வோம் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறினார். காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் சிலர் கூட்டணி தொடர்பாக வதந்திகளை பரப்புவதும், ஆட்சியில் பங்கு, அதிக சீட் என்று குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த சூழ்நிலையில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்னை வந்தார்.
சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி. திமுகவுடன் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிப்போம். கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை காங்கிரஸ் புறக்கணித்தது நியாயமானதே. இவ்வாறு அவர் கூறினார்.
