ஆட்சி, அதிகாரத்தில் பங்கு விஜய்யின் ஆபரை நம்பி யாரும் செல்லவில்லை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேட்டி

தூத்துக்குடி: ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் ஆபர் கொடுத்த பிறகும் விஜய்யை நம்பி யாரும் அவருடைய கூட்டணிக்கு செல்லவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடக்கூடிய அணிகளில் மிக வலுவான கூட்டணி திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி தான். மற்றவர்கள் எல்லாம் கூட்டணிக்கு அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக – பாஜ கடந்த 4 மாதமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் யாரும் அவர்களுடன் போய் சேரவில்லை.

தவெக விஜய் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் ஆபர் கொடுத்த பிறகும் அந்த ஆபரை ஏற்றுக்கொண்டு, நம்பி யாரும் விஜய் கூட்டணிக்கு செல்லவில்லை. இன்றைய தேதியில் திமுக தலைமையிலான அணி தான் வலுவான அணி என்ற அடிப்படையிலும், பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கக்கூடிய அணி என்ற அடிப்படையிலும் திமுக அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இன்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி இருப்பதன் மூலமாக அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* வரலாற்று சிறப்பு மிக்க தீர்வு: முதல்வருக்கு நன்றி
‘அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால பிரச்னைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கண்டுள்ளது வரலாற்று சிறப்புமிக்கது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசிற்கும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராட்டம் நடத்திய போது அதிமுக அரசு கொடூரமான அடக்குமுறைகளை மேற்கொண்டது. திமுக கடந்த தேர்தலின் போது கொடுத்த முக்கியமான வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டம், இனி எந்த ஆட்சி வந்தாலும் தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: