திருச்சி: இரு நாள் பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை திருச்சி வருகிறார். புதுக்கோட்டை நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருச்சியில் தங்கும் அமித்ஷாவுடன் சந்திப்பை டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்தமான் தீவுகளின் தலைநகர் போர்ட்பிளேர் விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் இன்று (4ம்தேதி) மாலை 4.55 மணியளவில் திருச்சி வருகிறார். பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டைக்கு செல்கிறார். புதுக்கோட்டை அருகே பள்ளத்திவயல் கருவேப்பிலான் கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹெலிபேடில்’ ஹெலிகாப்டர் தரை இறங்குகிறது. பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு, ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும் பள்ளத்தி வயலுக்கு செல்கிறார்.
பொதுக்கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு, காரில் புறப்பட்டு திருச்சி வருகிறார். இரவு 8 மணியளவில் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். ஜன.5ம் தேதி காலை 9.50 மணியளவில் ஓட்டலில் இருந்து புறப்பட்டு காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் ஓட்டலுக்கு காலை 10.40 மணிக்கு வருகிறார். அங்கு, ஒரு மணிநேரம் ஓய்வுக்கு பின்னர், காரில் சென்று மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் பிற்பகல் 12 மணியளவில் நடைபெறும் பொங்கல் விழாவில் அமித்ஷா பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து மதியம் 1.05 மணியளவில் புறப்பட்டு கார் மூலம் திருச்சி, விமான நிலையம் செல்கிறார். விமான நிலையத்திலிருந்து 1.20 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு, திருச்சி, புதுக்கோட்டையில் 2 நாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் 2 நாள் தங்கும் அமித்ஷா, பாஜ முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. இதில், தற்போது தமிழகத்தில் பாஜவின் நிலைமை, கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தமிழகம் வரும்போது அவர்களை சந்திப்பதற்காக ஓபிஎஸ், டிடிவி தினகரன் நேரம் கேட்பது வழக்கம். ஆனால் இந்த முறை இவர்கள் இருவரும் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை என தெரிகிறது. அதிமுகவில் இணைப்பு தொடர்பாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பினர் வைத்த கோரிக்கையை அமித்ஷா நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுவே இருவரின் இந்த புறக்கணிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
* தேர்தல் கூட்டணி குறித்து நாளை தஞ்சையில் அமமுக முக்கிய முடிவு
தஞ்சாவூரில் ஜன.5ம் தேதி அமமுக சார்பில் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொருளாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் முக்கிய முடிவு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
