சென்னை: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழக மக்களில் ஒரு பிரிவினர் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் மற்றும் இலவச அறிவிப்புகளை பார்த்தும் ஓட்டு போட்டு வருகிறார்கள். அந்த வகையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பல தேர்தல்களில் கதாநாயகன்களாகவே திகழ்ந்துள்ளன. அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையை சிறப்பாக தயாரிப்பதற்காக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 25ம் தேதி அறிவித்தார்.
இவர்கள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் கருத்துகளை கேட்டு அறிவார்கள் என்றும் அதற்கு ஏற்ப தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணி நேற்று தொடங்கி உள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
* வரும் 7ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாவட்ட வாரியாக கருத்துகேட்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 17வது சட்டமன்ற பேரவைக்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அதிமுக சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாடு முழுவதும், வருகிற 7ம் தேதி முதல் 20ம் தேதி வரை, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 9 மண்டலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். அதன்படி, 7ம் தேதி (புதன்) – வேலூர், சேலம் மண்டலம் (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்), 8ம் தேதி – விழுப்புரம், திருச்சி மண்டலம் (விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்),
9ம் தேதி – தஞ்சாவூர், சிவகங்கை மண்டலம் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுறை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள்), 11ம் தேதி – மதுரை, திருநெல்வேலி மண்டலம் (மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள்), 19ம் தேதி – கோவை மண்டலம் (கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள்), 20ம் தேதி – சென்னை மண்டலம் (சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள்), மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், தங்களுக்குள் கலந்து ஆலோசித்து, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு வருகை தந்து பொதுமக்களின் கருத்துகளை பெறும் வகையில், அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
