சென்னை: லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக் கணிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில், மு.க.ஸ்டாலின், என்.டி.ஏ கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் சீமான், புதிய கட்சியான த.வெ.க. விஜய் ஆகிய 4 பேர் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர்.
இதுவரை இல்லாத வகையில் நான்கு முனை போட்டியாக நடைபெறும் இந்த தேர்தலில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பான இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள 81,375 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள், தற்போது வெளியிடப்பட்டுள்ளது, இதில், மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு 55 சதவீதம் பேர் ஆம் என்றும், 29 சதவீதம் பேர் இல்லை என்றும், 16 சதவீதம் பேர் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ஆனால் தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருத்துக்கணிப்பில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
கட்சி வாரியாக யாருக்கு ஆதரவு என்ற பட்டியலில் திமுக 17.07 சதவீதத்துடன் முதலிடத்திலும், அதிமுக 15.03 சதவீதத்துடன் 2ம் இடத்திலும், த.வெ.க 14.20 சதவீதத்துடன் 3ம் இடத்திலும், நாம் தமிழர் 7.50 சதவீதத்துடன் 4ம் இடத்திலும்
உள்ளன. இந்த கருத்துக்கணிப்புக்காக நகரங்களில் 54.8 சதவீதம் பேரிடமும், கிராமங்களில் 41.3 சதவீதம் பேரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. அதேபோல் 21 முதல் 30 வயதினர் 25.6 சதவிகிதம் பேரிடமும், 46 முதல் 60 வயதினர் 23.5 சதவிகிதம் பேரிடமும் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 41.3 சதவிகிதம் பேர் 31 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
